"உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி" : திஸ்ஸகுட்டிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சாகர

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தெரிவிக்கப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியின் சர்ச்சைக்குரிய கருத்து, கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது கட்சித் தலைமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிடத் தூண்டியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் நாளில் தான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன் என்று குட்டியாராச்சி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியில் நான் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. எனக்கு மேலே நாமல் ராஜபக்ச மாத்திரமே உள்ளார்.

நாமல் ராஜபக்சவிற்கு நெருங்கிய சகா மட்டுமன்றி நெருங்கிய ஆதரவாளனும் நான் தான். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவர் உத்தியோகபூர்வமான ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

நான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் திஸ்ஸ குட்டி ஆராச்சி தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்று சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பின்னணியில், கட்சியின் பொதுச் செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொலைபேசி மூலம் இந்த எச்சரிக்கை அவருக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே, முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி நாளை கட்சி அலுவலகத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.